சியோல், டிச 5 : இராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு திடீரென எடுத்த முடிவின் எதிரொலியாக தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலுக்கு எதிராக பதவி பறிப்புத் தீர்மானத்தை கொண்டு வர அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பரிந்துரைத்தனர்.
நாடாளுமன்றத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான குழப்பமான மோதலுக்குப் பின்னர் இராணுவச் சட்ட அமலாக்க முடிவிலிருந்து யூன் பின்வாங்கினார்.
ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதார சக்தியாகவும் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாகவும் விளங்கி வரும் தென்கொரியாவில் அரசியல் நடவடிக்கைளுக்கு தடை விதிப்பதற்கும் ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கும் இராணுவச் சட்டத்தை அதிபர் கடந்த செவ்வாய்கிழமை பின்னேரம் அறிவித்தார்.
இந்த முடிவு குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை எனக் கூறிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிலிக்கன், இவ்விவகாரம் தொடர்பில் தென் கொரிய வெளியுறவு அமைச்சருடன் விரைவில் பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.
இராணுவ வீரர்கள் சியோல் நாடாளுமன்றக் கட்டிடத்தில் நேற்று வலுக்கட்டாயமாக நுழையு முயன்றனர். எனினும் நாடாளுமன்றக் காவலர்கள் தீயணைப்பு சாதனங்களிலிருந்து வாயுவை பீச்சியடித்து அவர்களின் முயற்சியைத் தடுத்தனர்.
இராணுவச் சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதிபர் யூனுக்கு எதிரான பதவிப் பறிப்புத் தீர்மானத்தை தென் கொரிய எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தன. யூன் கடுமையான போக்கை கடைபிடிப்பதாக எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.


