குளுவாங், டிச.5 - தாயார் என நம்பப்படும் ஐம்பது வயது மதிக்கத்தக்க
பெண்மணியின் மரணம் தொடர்பில் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்
ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று காலை
இங்குள்ள ஸ்ரீ லாலாங், பெல்டா ஆயர் ஹீத்தாமில் நிகழ்ந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று காலை 10.45 மணியளவில் பொது
மக்களிடமிருந்து தாங்கள் தகவலைப் பெற்றதாக குளுவாங் மாவட்ட
போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரின் முகமது நோ கூறினார்.
உள்நாட்டவர் என நம்பப்படும் பெண்மணி ஒருவர் தரையில்
சுயநினைவின்றி கிடப்பது தொடர்பில் பொது மக்களிடமிருந்து நாங்கள்
புகாரைப் பெற்றோம். அப்பெண்மணியின் முதுகு பகுதியில் கத்திக் குத்து
காயம் காணப்பட்டது. சந்தேகப் பேர்வழி கத்தியால் அவரைக்
குத்தியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என அவர் அவர் குறிப்பிட்டார்.
அம்மாது உடனடியாக குளுவாங், எஞ்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம்
மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அவர் உயிரிழந்து
விட்டதை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார் என பாஹ்ரின் அறிக்கை
ஒன்றில் கூறினார்.
இந்த கொலை தொடர்பில் சந்தேகப் பேர்வழியை தாங்கள் காலை 11.00
மணியளவில் சம்பவ இடத்தில் கைது செய்ததாகக் கூறிய அவர்,
அவருக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்பதோடு போதைப்
பழக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்பது தொடக்கக் கட்ட
சோதனையில் தெரிய வந்தது என்றார் அவர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அந்த ஆடவர் குற்றவியல்
சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து
வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் மேலும் சொன்னார்.


