ஷா ஆலம், டிச.5- கிழக்குக் கரை மாநிலங்கள் உள்பட நாட்டின் ஏழு
மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் தற்போது தணிந்து வருகிறது. இன்று
காலை 7.30 மணி நிலவரப்படி அம்மாநிலங்களில் உள்ள 186 தற்காலிக
துயர் துடைப்பு மையங்களில் 15,59 குடும்பங்களைச் சேர்ந்த 50,765 பேர்
மட்டுமே தங்கியுள்ளனர்.
கிளந்தான் மாநிலத்திலும் வெள்ள நிலைமை சீரடைந்து வரும் நிலையில்
அங்குள்ள 88 நிவாரண மையங்களில் 11,152 குடும்பங்களைச் சேர்ந்த 35,075
பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.
திரங்கானு மாநிலத்தின் ஏழு மாவட்டங்களை இன்னும் வெள்ளம்
சூழ்ந்துள்ளது. அங்குள்ள 41 வெள்ள துயர் துடைப்பு மையங்களில் 2,117
குடும்பங்களைச் சேர்ந்த 8,305 பேர் தங்கியுள்ளனர்.
கெடா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் செயல்படும் 27 நிவாரண
மையங்களில் 1,883 குடும்பங்களைச் சேர்ந்த 5,679 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.
ஜோகூர் மாநிலத்தைப் பொறுத்த வரை இரு மாவட்டங்களில்
திறக்கப்பட்டுள்ள 18 மையங்களில் 296 குடும்பங்களைச் சேர்ந்த 1,033 பேர்
புகலிடம் பெற்றுள்ளனர். பேராக் மாவட்டத்தின் இரு மாவட்டங்களில்
உள்ள ஆறு துயர் துடைப்பு மையங்களில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 165
பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.
இதனிடையே, மலாக்கா மாநிலத்திலும் வெள்ள நிலைமை சீரடைந்து
வருகிறது. இங்கு செயல்படும் இரு நிவாரண மையங்களில் 41
குடும்பங்களைச் சேர்ந்த 160 பேர் தங்கியுள்ள நிலையில் பகாங்
மாநிலத்திலுள்ள நான்கு மையங்களில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர்
அடைக்கலம் பெற்றுள்ளனர்.


