பெட்டாலிங் ஜெயா, டிச. 4 - அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் தேர்தல் மாநாட்டில் தனது பதவியை தற்காக்கப் போவதில்லை என்று மலேசிய கால்பந்து சங்கத்தின் (எஃப்.ஏ.எம்.) தலைவர் டான்ஸ்ரீ ஹமிடின் முகமது அமீன் இன்று அறிவித்தார்.
கிளானா ஜெயாவில் உள்ள விஸ்மா எஃப்.ஏ.எம்.மில் நடைபெற்ற 2021-2025 தவணைக்கான 13ஆவது செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எஃப்.ஏ.எம். தலைவராக ஹமிடின் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.
ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு மக்கோத்தா இஸ்மாயிலுக்குப் பதிலாக எஃப்.ஏ.எம். தலைவராக அவர் தேர்வு செய்யப்படுவது தொடர்பான அறிவிப்பு 54வது எஃப்.ஏ.எம். மாநாட்டில் வெளியிடப்பட்டது.
எஃப்.ஏ.எம்.மின் 57வது பேராளர் மாநாட்டிலும் 2021-2025 தவணைக்கு ஹமிடின் போட்டியின்றி பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்
ஹமிடின் 2023-2027 தவணைக்கு பிஃபா மன்ற உறுப்பினராக உள்ளதோடு ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (ஏ.எஃப்.சி.) நிர்வாகக் குழுவிலும் பணியாற்றுகிறார். ஏ.எஃப்.சி. நிதிக் குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2025-2029 தவணைக்கான எஃப்.ஏ.எம். தேர்தல் மாநாடு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் நடைபெறவுள்ளது.


