கோலாலம்பூர், நஸ். 4 - நாட்டின் பல மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்க உதவுவதில் தனியார் மற்றும் பெருநிறுவனத் துறைகளின் பங்களிப்புக்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மத்திய அரசு, மாநில அரசு, அதிகாரிகள் மற்றும் அரசு இயந்திரங்கள் செய்த உதவிகள் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான அசாதாரண வலிமையைக் காட்டுகிறது என்று நிதியமைச்சருமான அவர் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் பெருநிறுவனத் துறையின் அக்கறையை அரசாங்கம் வரவேற்கிறது. கடந்த அக்டோபர் வரை பி.என்.பி. ( பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட்), பெட்ரோனாஸ், யாயாசான் ஹஸ்னா மற்றும் ஃபார்மாநியாகா போன்ற அரசு நிறுவனங்கள் 1 கோடி வெள்ளிக்கும் அதிக மதிப்புள்ள உதவிகளை வழங்கியுள்ளன.
இறைவன் அருளால் இன்றும் நான் முன்னணி தனியார் நிறுவனங்களிடமிருந்து வெள்ள நிவாரண நன்கொடையாக 3.5 கோடி வெள்ளிக்கும் அதிகமானத் தொகையைப் பெறுவேன். ஆகவே இந்த மாண்புக்குரிய சபையில் மேலவை சார்பாக அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் அவர் கூறினார்.
2025 ஆம் ஆண்டுக்கான விநியோக சட்ட மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்காக தாக்கல் செய்த போது அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை குறைக்க நிதி வழங்குவதிலும் நிவாரண உதவிகளை அனுப்புவதிலும் தனியார் துறையினர் இணைய வேண்டும் என்று கடந்த செவ்வாய்கிழமை புத்ராஜெயாவில் பிரதமர் துறை ஊழியர்களுடனான சந்திப்பு நிகழ்வில் உரையாற்றும்போது பிரதமர் வலியுறுத்தியிருந்தார்.


