கோலாலம்பூர், டிச. 4 - ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி
வோங் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடின் இன்று மரியாதை
நிமித்தச் சந்திப்பை நடத்தினார். ஆறாவது மலேசிய-ஆஸ்திரேலியா
வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பென்னி
மலேசியா வந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது இரு தலைவர்களும்
பொருளாதாரம், தற்காப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் உயர்கல்வி
உள்ளிட்ட விஷயங்களில் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது மற்றும்
2025ஆம் ஆண்டுடன் 70 ஆண்டுகள் பூர்த்தியடையும் மலேசிய-
ஆஸ்திரேலிய உறவு குறித்து விவாதித்தனர்.
அடுத்தாண்டு ஆசியான் தலைவர் பதவியை ஏற்க தயாராக உள்ள
மலேசியாவுக்கு ஆஸ்திரேலியாவின் முழு ஆதரவையும் அமைச்சர்
பென்னி உறுதிப்படுத்தினார்.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசியான் மாநாட்டில் கலந்து
கொள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிசுக்கு பிரத்தியேக
அழைப்பையும் பிரதமர் விடுத்தார்.
இந்த முப்பது நிமிட சந்திப்பின் போது நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள
வெள்ளப் பிரச்சனைக்கும் ஆஸ்திரேலிய அமைச்சர் தனது அனுதாபத்தை
தெரிவித்துக் கொண்டார்.
இந்த சந்திப்பின் போது வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது
ஹசானும் உடனிருந்தார்.
மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் கடந்த 1957ஆம் ஆண்டு அரச தந்திர
உறவை ஏற்படுத்திக் கொண்டதாக விஸ்மா புத்ரா கூறியது.


