புத்ராஜெயா,டிச 4: வெள்ளம் தொடர்பான ஒதுக்கீடுகளை வழங்கும் நடவடிக்கை ஒரு குறிப்பிட்ட அதாவது பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்ப்பது மற்றும் அடையாளம் காண்பது உள்ளிட்ட செயல்முறையை உள்ளடக்கியது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறினார்.
"முதலாவதாக, சேதம், வசதிகள் மற்றும் பொது மக்களின் தேவைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறோம்," என்று புத்ராஜெயா நகர கண்காணிப்பு மையத்தை (PUO) துவக்கி வைத்த பின்னர் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எதிர்க்கட்சியினரின் பகுதிகளுக்கு 1 மில்லியன் ரிங்கிட் உடனடியாக ஒதுக்கீடு செய்வதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியினர் கோரிக்கை குறித்து கருத்து கேட்டபோது ஃபடில்லா இவ்வாறு கூறினார்.
நேற்று, இந்த விவகாரம் தொடர்பாக தனது தரப்பு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் விண்ணப்பம் செய்ததாக அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம் தெரிவித்தார்.
இதற்கிடையில், இன்றும் நாளையும் நடைபெறும் புத்ராஜெயா டிஜிட்டல் கண்காட்சி மற்றும் மாநாட்டை (DiPEC2024) முன்னிட்டு புத்ராஜெயா நகர கண்காணிப்பு மைய திறப்பு விழா நடைபெற்றது.
- பெர்னாமா


