ஷா ஆலம், டிச. 4- ஊழலை அம்பலப்படுத்தும் மற்றும் அத்தகைய
சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும்
மனோதிடத்தை அரசு ஊழியர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று தேசிய
போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஆயோப் கான் மைடின்
பிச்சை வலியுறுத்தியுள்ளார்.
தங்களின் முறைகேடான செயல்களை மூடி மறைக்கும் அமைப்புகளின்
செயலைச் சாடிய அவர், அமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும்
ஆக்கத்தன்மையை சீர்குலைக்கும் செயல்களுக்கு எதிராக கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
முறைகேடானச் செயல்களுக்கு எதிரா வெளிப்படையாகவும் உறுதியாகவும்
போராடுவதன் மூலம் தலைவர்கள் உயர்நெறிக்கு முன்னுரிமை அளிக்க
வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
பொதுச் சேவைத் துறையைப் பொறுத்த வரை ஒருவரின் இரகசியங்களை
அம்பலப்படுத்தக்கூடாது என்பது நடைமுறையாக இருந்து வருகிறது.
உள்விசாரணைகளும் ஒழுங்கு நடவடிக்கைகளும் இடைவிடாது
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இது போதாது.
தங்களுக்கு நெருக்கமான நபர்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும் தவறுகளுக்கு
எதிராக நடவடிக்கை எடுப்பதில் தீர்க்கமுடன் செயல்படும் தைரியத்தை
தலைவர்கள் கொண்டிருக்க வேண்டும்.
அர்த்தமுள்ள மாற்றங்களை செய்வதில் அவர்கள் உறுதியான
நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால் பிரபலத்தை இழந்து விடுவோம் என்ற
பயம் அவர்களின் பணிக்கு ஒருபோதும் தடையாக இருக்காது என்று அவர்
ஆயோப் கான் சொன்னார்.
எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் ஏற்பாட்டில்
இங்குள்ள மெரியோட் செத்தியா ஆலமில் நடைபெற்ற சிறந்த வர்த்தக
நிர்வாக ஆய்வரங்கில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தகுதியை விட தனிபட்ட நலனுக்காக ஒரு சிலரை உயர்த்திப் பிடிக்கும்
கலாசாரத்தையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். கோல்ப்
கலாசாரம் என அழைக்கப்படும் இந்த பழக்கம் உயர் பதவியிலுள்ள
அரசாங்க ஊழியர்களிடையே காணப்படுகிறது என்றார் அவர்.


