NATIONAL

தென் கொரியாவிலுள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்து

4 டிசம்பர் 2024, 4:49 AM
தென் கொரியாவிலுள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்து

புத்ராஜெயா, டிச. 4 - தென் கொரியாவில் வசிக்கும் அல்லது அங்கு செல்லும் மலேசியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் அதேவேளையில்  உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்களை எப்போதும் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

நாடு முழுவதும் இராணுவச் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து தென் கொரியாவில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக அமைச்சு இன்று ஒரு அறிக்கையில் அறிவித்தது.

நடப்புத்  தகவல்களைப் பெறவும்   சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை  உறுதி செய்யவும் தென் கொரியாவில் உள்ள மலேசியர்கள்  இ-கவுன்சிலர் மூலம் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூதரக உதவி தேவைப்படுபவர்கள் சியோலில் உள்ள மலேசியத் தூதரகத்தை 129, டோக்ஸோடாங்-ரோ ஹன்னம்-டாங், யோங்சன்-கு, சியோல் 04419 என்ற முகவரியில்  அல்லது +82-2-2077 8600 அல்லது +82-2-794 5488 என்ற எண்களில் அல்லது  mwseoul@kln.gov.my. என்ற மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளலாம் .

அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு தொடர்ந்து நிலைமையை அணுக்கமாகக் கண்காணிக்கும் என்றும் அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் நேற்று நாட்டில்  இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினார்.  கிளர்ச்சிக்குத் திட்டமிடும் நோக்கிலான தேசத் துரோக  நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள்   ஈடுபடுவதாகக் அதிபர்  குற்றம் சாட்டியிருந்தார்

இந்த இராணுவச் சட்டம் வட கொரியா சார்பு குழுக்களை ஒடுக்குவதையும் சுதந்திர அடிப்படையிலான அரசியலமைப்பின் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று யூன்  தொலைக்காட்சி வழி மக்களுக்கு  ஆற்றிய உரையில் கூறினார். இந்த முடிவு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும்  கவலையை ஏற்படுத்தியது.

எனினும், அந்த இராணுவச்  சட்டப் பிரகடனத்தை ரத்து செய்யும்படி நாடாளுமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து  இராணுவச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக அதிபர் இன்று அதிகாலை அறிவித்தார்.

இராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட படைகள் அந்தந்த தளங்களுக்குத் திரும்பியதைத் தொடர்ந்து  நாட்டில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியதை  கூட்டுப் படைத் தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.