கோலாலம்பூர், டிச. 4 - பேராக் மாநிலத்தின் பாண்டிங் பகுதியில் ரோந்துப்
பணியில் ஈடுபட்டிருந்த போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில்
சிக்கிய இராணுவ வீரர்களில் ஒருவர் உயிரிழந்த வேளையில் மற்றொரு
வீரர் காணாமல் போனதை மலேசிய இராணுவம் (டி.டி.எம்)
உறுதிப்படுத்தியது.
கடந்த மாதம் 30ஆம் தேதி பெர்மாத்தாங், சுங்கை மேரா பகுதியில்
அவர்கள் ஏழு சகாக்களுடன் ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த போது
இச்சம்பவம் நிகழ்ந்ததாக டி.டி.எம். அறிக்கை ஒன்றில் கூறியது.
மலேசிய-தாய்லாந்து எல்லையிலுள்ள அப்பகுதியில் காலை 8.00
மணியளவில் இந்த ரோந்துப் பணியை அவர்கள் மேற்கொண்டிருந்த போது
ஆற்றில் திடீரென நீர்ப் பெருக்கு ஏற்பட்டதாக அந்த அறிக்கை
குறிப்பிட்டது.
அன்றைய தினம் பிற்பகல் 12.30 மணிளவில் அவர்களில் ஏழு வீரர்கள்
பாதுகாப்பான நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும்,
மலாக்கா சுங்கை ஊடாங் முகாமின் 21வது கமாண்டோ குழுவைச் சேர்ந்த
லான்ஸ் கார்ப்ரல் முகமது அப்பாண்டி ஜாஹ்வின் மற்றும் மெர்சிங்
முகாமின் 22வது கமாண்டோ குழுவைச் சேர்ந்த லான்ஸ் கார்ப்ரல்
ஜூல்ஹில்மி அகமது தமிஸி ஆகியோர் காணாமல் போனதாக
அறிவிக்கப்பட்டது.
அவர்களில் அப்பாண்டியின் உடல் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி மாலை 6.00
மணியளவில் ஆற்றோரம் மீட்புக் குழுவினரால் கண்டு பிடிக்கப்பட்டது.
நல்லடக்கச் சடங்கிற்காக அவரது உடல் இராணுவ விமானம் மூலம்
நேற்று சொந்த ஊரான சரவாக் மாநிலத்தின் மாத்துவுக்கு கொண்டுச்
செல்லப்பட்டது என்று அந்த அறிக்கை தெரிவித்தது.


