கோலாலம்பூர், டிச. 4- மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான
விமானச் சேவை அதிகரிக்கப்படும் நிலையில் முதன் முறையாக
நாட்டிற்கு சேவையைத் தொடக்கியுள்ள இந்தியாவின் இண்டிகோ
ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மூன்று புதிய வழித்தடங்களை
அறிமுகப்படுத்துகிறது.
இவற்றில் பெங்களுரு- கோலாலம்பூர் மற்றும் லங்காவி இடையிலான
தினசரி பயணச் சேவையும் சென்னை- பினாங்கு இடையிலான தினசரி
பயணச் சேவையும் அடங்கும். அதே சமயம், மலேசியன் ஏர்லைன்ஸ்
நிறுவனம் கோலாலம்பூர்-கொல்கத்தா இடையே வாரம் மூன்று முறை
பயணச் சேவையை அறிமுகப்படுத்துகிறது.
இம்மாதம் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பத்து அனைத்துலக தடங்களில்
இதுவும் அடங்கும் என்று சுற்றுலா, கலை மற்றும் கலாசாரத் துறை
அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் கூறினார்.
ஒரு வாடகைத் பயணத் தடம் உள்ளிட்ட இந்த புதிய பயணத் தடங்களின்
வாயிலாக 3,100க்கும் மேற்பட்ட வாராந்திர சேவைகள்
அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
கூடுதலாக, நாட்டின் ஐந்து முக்கிய நகரங்களான கோலாலம்பூர், ஜோகூர்
பாரு, கோத்தா கினபாலு, லங்காவி, பினாங்கு இடையே கூடுதல் பயணச்
சேவைகள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் இதன் மூலம் சம்பந்தப்பட்ட
மாநிலங்கள் அதிக சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்கும் பயணிகள் கூடுதல்
பயணத் தேர்வுகளை பெறுவதற்கும் வாய்ப்பு கிட்டும் என்று அவர்
குறிப்பிட்டார்.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை நாட்டிற்கு வந்த சுற்றுப்பயணிகளின்
எண்ணிக்கை 2 கோடியே 5 லட்சம் பேராக உயர்ந்துள்ளதாகக் கூறிய
அவர், கடந்தாண்டு முழுவதும் பதிவான 2 கோடியே 1 லட்சத்து 40
பயணிகளை விட இது அதிகமாகும் என்றார்.
இந்த பத்து புதிய தடங்களில் ஒன்றாக விஜேட் விமான நிறுவனம்
வழங்கும் வியட்னாம் நாட்டின் ஹனோய் மற்றும் கோலாலம்பூர்
இடையிலான பயணச் சேவையும் விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
அதே சமயம், பாத்தேக் ஏர் நிறுவனம் பேங்காக் மற்றும் ஜோகூர்பாரு
இடையே வாரம் மூன்று முறை பயணம் மேற்கொள்ளும் வேளையில் ஏர்
ஆசியா நிறுவனம் சைகோன்- கோத்தா கினபாலு இடையை வாரம் ஐந்து
பயணங்களையும் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொல்கத்தா-
கோலாலம்பூர் இடையே வாரம் மூன்று முறையும் ஷங்காய் ஏர்லைன்ஸ்
யுன்செங்-கோலாலம்பூர் இடையே வாரம் மூன்று பயணங்களையும்
மேற்கொள்கிறது என்றார் அவர்.


