கோலாலம்பூர், டிச. 4 - நாட்டில் இவ்வாண்டு சுமார் 290,000 பேர் கற்றல் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்தார்.
இவ்வாண்டு அக்டோபர் 31 வரையிலான நிலவரப்படி, 289,161 பேர் கற்றல் குறைபாடுடையவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 262,283 பேராக இருந்தது. ஓராண்டில் 26,878 பேர் அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது என்று அவர் சொன்னார்.
நேர்மறையாக பார்த்தால், அதிகமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கற்றல் மாற்றுத் திறனாளிகளாகப் பதிவுசெய்வதை அறிந்திருக்கிறார்கள் என்பதற்கான நல்ல அறிகுறியாகும். மேலும் இது மாற்றுத் திறனாளி பிள்ளைகள் தொடர்பான தப்பெண்ணத்தை அகற்றவும் உதவும் என்று அவர் அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு நடைபெற்ற 2024 தேசிய மாற்றுத் திறனாளிகள் தின கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.
இந்த நிகழ்வில் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ நோராய்னி அகமது மற்றும் செனட்டர் ஏசாயா ஜேக்கப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கேற்றாற்போல் மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாக்கவும் இடமளிக்கவும் திறனை மேம்படுத்தவும் விரிவான திட்டங்கள் அல்லது வழிகாட்டுதல்களை வழங்க வேண்டியதன் அவசியம் உள்ளதையும் நான்சி சுட்டிக் காட்டினார்.
ஆகவே, குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொகுதியை உருவாக்க அமைச்சு ஏற்கனவே பல்கலைக்கழகங்களுடன் பல்வேறு விவேக பங்காளித்துவ ஒத்துழைப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தரப்பினர் பிரதான அலையிலிருந்து வெளியேறாமல் இருப்பதை இது உறுதி செய்கிறது என்று அவர் கூறினார்.


