சியோல், டிச. 4:- இராணுவச் சட்டப் பிரகடனத்தை அதிபர் யூன் சுக் யோல் ரத்து செய்யக் கோரி தென் கொரிய நாடாளுமன்றம் இன்று அந்த தீர்மானத்தை நிறைவேற்றியதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரும் போது இராணுவச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.
மொத்தம் 300 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 190 பேர் அவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் இராணுவச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பிரேரணையை ஆதரித்தனர். இந்த தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் இராணுவச் சட்டப் பிரகடனம் இனி செல்லாது என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது.
தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் நேற்று நாட்டில் இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினார். கிளர்ச்சிக்குத் திட்டமிடும் நோக்கிலான தேசத் துரோக நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபடுவதாகக் அதிபர் குற்றம் சாட்டியதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்த இராணுவச் சட்டம் வட கொரியா சார்பு குழுக்களை ஒடுக்குவதையும் சுதந்திர அடிப்படையிலான அரசியலமைப்பின் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று யூன் தொலைக்காட்சி வழி மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார்.
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற பட்ஜெட் குழுவில் சிறிய அளவிலான பட்ஜெட் மசோதாவை நிறைவேற்றியதோடு தேசிய தணிக்கையாளர் மற்றும் தலைமை வழக்கறிஞர் மீது வழக்குத் தொடர்வதற்கான மசோதாவை சமர்ப்பித்தப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பத்திரிகை சுதந்திரம், வெளியீடு, ஒன்றுகூடல் மற்றும் அரசு மற்றும் நீதிமன்ற அதிகாரங்கள் உட்பட சில சுதந்திரங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க இந்த பிரகடனம் அனுமதிக்கிறது.
எனினும், பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை ரத்து செய்யக் கோரினால் இராணுவச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.


