புத்ராஜெயா, டிச. 4 - அரச மலேசிய சுங்கத் துறை நேற்று வரை 6,135 கோடி
வெள்ளி வரியை வசூலித்துள்ளது. இவ்வாண்டு முழுமைக்கும் 5,600 கோடி
வெள்ளியை வசூலிக்கும் நிதியமைச்சின் இலக்கை அது தாண்டிவிட்டது.
இவ்வாண்டிற்கான வருமான இலக்கை 6,117 கோடி வெள்ளியாக உயர்த்தி
கடந்த அக்டோபர் 18ஆம் தேதி செய்யப்பட்ட மறுநிர்ணயத்தையும் இந்த
வருமானம் தாண்டி விட்டது என்று சுங்கத் துறையின் தலைமை
இயக்குநர் டத்தோ அனிஸ் ரிசானா முகமது ஜைனுடின் கூறினார்.
இம்மாதம் 2ஆம் தேதி வரை அரச மலேசிய சுங்கத் துறை 6,135 கோடி
வெள்ளியை வசூலித்துள்ளது. இவ்வாண்டில் வசூலிப்பதற்கு நாம்
நிர்ணயித்திருந்த 5,600 கோடி வெள்ளி இலக்கை விட இது 109.55
விழுக்காடு அதிகமாகும் என்று அவர் நேற்று இங்கு நடைபெற்ற
செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இவ்வாண்டு நவம்பர் 30ஆம் தேதி வரை சுங்கத் துறை 6,096 கோடி
வெள்ளி வரியை வசூலித்திருந்தது. கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில்
5,195 கோடி வெள்ளி மட்டுமே வசூலிக்கப்பட்டிருந்தது. 901 கோடி வெள்ளி
அல்லது 17.34 விழுக்காட்டு வருமான அதிகரிப்பை இது பிரதிபலிக்கிறது
என்றார் அவர்.
நேற்று வரை, சட்டவிரோத பொருள் கடத்தல் மற்றும் சுங்க வரி ஏய்ப்பு
தொடர்பான 6,708 சம்பவங்களை சுங்கத் துறை முறியடித்துள்ளது என்றும்
அவர் சொன்னார்.
அவற்றில் 153.2 கோடி வெள்ளி மதிப்பிலான பொருள்கள் அடங்கிய
பறிமுதல் நடவடிக்கைகளும் அடங்கும். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில்
இது 73.26 விழுக்காடு அதிகமாகும் என்றார் அவர்.
கடந்த ஜனவரி முதல் டிசம்பர் 2 வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் வாகனங்கள், போதைப் பொருள், சிகிரெட், மதுபானங்கள் மற்றும் ஜவுளி ஆகிய ஐந்து விதமான மூலப் பொருள்கள் அதிகம் பறிமுதல் செய்யப்பட்டன என்று அனிஸ் ரிசானா குறிப்பிட்டார்.


