கோலாலம்பூர், டிச. 4- மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2025
விநியோக மசோதா 2025 (வரவு செலவுத் திட்டம்) குரல் வாக்கெடுப்பின்
மூலம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நேற்று
நிறைவேற்றப்பட்டது.
நேற்று மக்களவைக்கு தற்காலிகமாக தலைமையேற்ற பாயா பெசார்
தேசிய முன்னணி உறுப்பினர் டத்தோ முகமது சஹார் அப்துல்லா
இதனை அறிவித்தார்.
பன்னிரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதம் மற்றும் நவம்பர் 13ஆம் தேதி
தொடங்கி நடைபெற்ற அமைச்சுகளுக்கான செயல்குழு ரீதியான
விவாதங்களை முடித்து வைக்கும் அங்கம் ஆகிய நடைமுறைகளுக்குப்
பின்னர் இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, 2025 வரவு செலவுத் திட்டத்தை மூன்றாம் வாசிப்புக்காக
இரண்டாம் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா அஜிசான் தாக்கல்
செய்தார்.
இந்த 2025 வரவு செலவுத் திட்டத்தை மக்களவை கடந்த நவம்பர் 12ஆம்
தேதி கொள்கை ரீதியாக நிறைவேற்றியது. முன்னதாக இந்த மசோதா மீது
கடந்த அக்டோபர் 21ஆம் தேதி முதல் விவாதமும் நவம்பர் 6ஆம் தேதி
தொடங்கி நான்கு நாட்களுக்கு விவாதத்தை முடித்து வைக்கும் அங்கமும்
இடம் பெற்றன.
மொத்தம் 42,100 கோடி வெள்ளி மதிப்பிலான 2025 வரவு செலவுத்
திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த அக்டோபர்
18ஆம் தேதி தாக்கல் செய்தார். நாட்டின் வரலாற்றில் அதிகத் தொகையை
உள்ளடக்கிய வரவு செலவுத் திட்டமாக இது விளங்குகிறது.


