குளுவாங், டிச. 4 - தனது பத்து வயது மகள் கடுமையான தீப்புண்களுக்கு
ஆளாகும் அளவுக்கு அவர் மீது சுடுநீரை ஊற்றி கொடுமைப்படுத்திய
சந்தேகத்தின் பேரில் பெண்மணி ஒருவரை போலீசார் கைது
செய்துள்ளனர்.
முப்பத்திரண்டு வயதுடைய அந்த பெண்மணியைத் தாங்கள் நேற்று
முன்தினம் பின்னிரவு 12.15 மணியளவில் இங்குள்ள கம்போங்
தெங்காவிலுள்ள வீடொன்றில் கைது செய்ததாக குளுவாங் மாவட்ட
போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரின் முகமது நோ கூறினார்.
அச்சிறுமியின் முதுகில் சுடுநீர் ஊற்றப்பட்டதால் ஏற்பட்ட தீப்புண்கள்
குறித்து சக மாணவி தெரிவித்த தகவலின் பேரில் பள்ளியின்
தலைமையாசிரியர் காவல் துறையில் புகார் அளித்ததாக அவர்
சொன்னார்.
அச்சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் சோதனையில் வலது கால்
மற்றும் உதட்டில் வீக்கம் காணப்பட்டதோடு இடது காலில் தீக்காயங்களும்
காணப்பட்டன என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சொந்த தாயாரின் கொடூரச் செயல்களால் அச்சிறுமிக்கு காயங்கள்
ஏற்பட்டது மருத்துவமனையில் நடத்தப்பட்ட தொடர் சோதனையில்
உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவின் கீழ் அச்சிறுமியின்
தாயார் விசாரணைக்காக எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை வரை ஆறு
நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் சொன்னார்.


