சிப்பாங், டிச. 3 - விரைவில் கொண்டாடப்படவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு தீபகற்ப மலேசியாவிலிருந்து சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்குச் செல்ல ஏர் ஏசியா நிறுவனம் நிலையான கட்டணத்தில் 27,000 டிக்கெட்டுகளை வழங்கவுள்ளது.
கோலாலம்பூர் மற்றும் ஜோகூர் பாருவிலிருந்து கூச்சிங், பிந்துலு, மிரி மற்றும் சிபு ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களுக்கான கட்டணம் 328 வெள்ளியாகவும் கோத்தா கினாபாலு, தாவாவ் மற்றும் சண்டக்கானுக்கான விமானக் கட்டணம் 388 வெள்ளியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை வர்த்தக அதிகாரி பால் கரோல் தெரிவித்தார்.
வரும் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 4 வரையிலான பண்டிகைக் காலத்தில் பயணத் தேவையில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பை பூர்த்தி செய்ய ஏர் ஆசியா 152 கூடுதல் விமானச் சேவைகளை மேற்கொள்ளும் என்று கரோல் கூறினார்.
சீனப் புத்தாண்டுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில் பாம்பு ஆண்டைக் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது நெகிழ்ச்சியையும் உறுதியையும் குறிக்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தைக் குறிக்கும் வகையில் மலிவு விலையில் நிலையான கட்டணங்களை வழங்குவதில் ஏர் ஆசியா பெருமிதம் கொள்கிறது. இந்த சிறப்பான தருணத்தில் மலேசியர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் ஒன்றிணைவதை உறுதிசெய்கிறது என்று அவர் இன்று ஏர் ஆசியா தலைமையகத்தில் நடைபெற்ற கட்டண வெளியீட்டு விழாவில் அவர் கூறினார்.


