ஷா ஆலம், டிச. 3 - பல வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் ரத்து
செய்யப்பட்டதற்கு அடிப்படையில் பலவீனமானவை என கருதப்படும்
நேரடிக் பேச்சுவார்த்தை முறையை மடாணி அரசாங்கம் நிராகரிப்பதே
காரணம் என பிரதமர் கூறினார்.
இந்த முடிவின் காரணமாக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட பெரும்
தொகை காப்பாற்றப்பட்டதோடு அனைத்து திட்டங்களும் நிர்ணயிக்கப்பட்ட
அட்டவணைபடி நடைபெறுகின்றன என்ற டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
தெரிவித்தார்.
நாம் அந்த திட்டங்களை ரத்து செய்ததற்கு அடிப்படையில்
பலவீனமானவை என கருதும் நேரடிப் பேச்சுவார்த்தை முறையே
காரணமாகும்.
அமைச்சு அல்லது அமைச்சருக்கு அறிமுகமான குத்தகையாளரை
நியமித்து நுட்ப மதிப்பீடு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் விலை
நிர்ணயிக்கப்படுகிறது.
திரங்கானுவில் ஒரு திட்டம் தவிரத்து இதர திட்டங்கள் யாவும்
திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் பெரும் தொகை
மிச்சப்படுத்தப்பட்டதற்கு என்ன ஆதாரம் எனக் கேட்டால், நேரடி
குத்தகைக்கு ஒதுக்கப்பட்ட பெரும் தொகையை டெண்டர் நடைமுறை
மூலம் நாம் காப்பாற்றியுள்ளோம் என்பதற்கான தரவுகள் நம்மிடம் உள்ளன
என்று அன்வார் சொன்னார்.
மக்களவையில் இன்று மூவார் உறுப்பினர் சைட் சடிக் அப்துல் ரஹ்மான்
எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். வெள்ளத் தடுப்புத்
திட்டங்களை ரத்து செய்து பின்னர் டெண்டர் மூலம் மறுபடியும் அவற்றை
அமல்படுத்தியதன் மூலம் கிடைத்த பலன்கள் என்ன என்று சைட் சாடிக்
கேள்வியெழுப்பியிருந்தார்.
திரங்கானுவில் மூன்று வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் முழுமை பெற்றுள்ள
வேளையில் பகாங்கில் 14 முதன்மைத் திட்டங்களில் எட்டு திட்டங்கள்
தற்போது அமல்படுத்தப்பட்டு வருகின்றன என்று பிரதமர் கூறினார்.


