கோல திரங்கானு, டிச. 3 - கடந்த மாதம் முதல் திரங்கானு மாநிலத்தை
சூழ்ந்துள்ள வெள்ளம் காரணமாக இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்தில் அதாவது நேற்று டுங்குன் போலீஸ் பயிற்சி மையத்தின்
(புலாபோல்) உறுப்பினர் ஒருவர் வெள்ளத்திற்கு பலியானதாக திரங்கானு
மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது கைரி கைருடின் கூறினார்.
வான் முகமது பிர்டாவுஸ் வான் நாசீர் (வயது 36) என்ற அந்த காவல்
துறை உறுப்பினர் டுங்குன் அருகிலுள்ள பெல்டா கெர்த்தே 3இல் உள்ள
செம்பனைத் தோட்டம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டதாக அவர்
சொன்னார்.
அந்த செம்பனைத் தோட்டத்தில் லோரி ஒன்றுடன் விட்டுச் சென்ற தனது
மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த பணப்பையை எடுப்பதற்காக
வான் முகமது பிர்டாவுஸ் தன் நண்பருடன் கடந்த சனிக்கிழமை அங்கு
சென்றதாக அவர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த வான் முகமது பிர்டாவுஸ்,
வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது நண்பர் ஒட்டி
வந்த லோரி வெள்ளத்தில் சிக்கி பழுதாகி நின்று விட்டது என அவர்
குறிப்பிட்டார்.
லோரியில் சிக்கிக் கொண்ட நண்பரை கிராம மக்கள் மாலை 5.00
மணியளவில் மீட்ட வேளையில் வான் முகமது பிர்டாவுசை
காணவில்லை. இதனைத் தொடர்ந்து தேடும் நடவடிக்கை முடுக்கி
விடப்பட்டு நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் அவரது உடல் பொது
மக்களால் கண்டு பிடிக்கப்பட்டது என்றார் அவர்.
கடந்த மாதம் 28ஆம் தேதி பெசுட், ஜாலான் கம்போங் பினாங்கில் துவான்
ஜூசோ துவான் ஹசான் (வயது 66) என்ற முதியவர் வெள்ளத்தில் சிக்கி
உயிரிழந்தார்.
இதனிடையே, உலு திரங்கானு, அஜில், கம்போங் புக்கிட் அப்பிட்டில்
நிகழ்ந்த நிலச்சரிவில் இரு சகோதரிகள் உயிரிழந்தனர்.


