கோலாலம்பூர், டிச. 3 - சிலாங்கூர் மாநிலம் கடந்த 2023ஆம் ஆண்டு முதல்
இவ்வாண்டு ஜூன் மாதம் வரை 2,900 கோடி வெள்ளி அங்கீகரிக்கப்பட்ட
அந்நிய முதலீடுகளைப் பெற்றுள்ளது. இதன் வழி அந்நிய முதலீடுகளை
அதிகம் பெற்ற ஐந்தாவது மாநிலமாக அது விளங்குகிறது.
மொத்தம் 6,500 கோடி வெள்ளி முதலீட்டுடன் பினாங்கு முதலிடத்திலும்
5,400 கோடி வெள்ளி முதலிட்டுடன் கெடா இரண்டாவது இடத்திலும் 4,300
கோடி வெள்ளி முதலீட்டுடன் கோலாலம்பூர் மூன்றாவது இடத்திலும் 3,800
கோடி வெள்ளி முதலீட்டுடன் ஜோகூர் நான்காவது இடத்திலும் உள்ளதாக
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் துணையமைச்சர் லியு சின்
தோங் தெரிவித்தார்.
இக்காலக்கட்டத்தில் நாடு முழுவதும் உற்பத்தி, சேவை மற்றும்
முதன்மைத் துறைகளில் 48,950 கோடி வெள்ளி மதிப்பிலான
அங்கீரிக்கப்பட்ட முதலீடுகளை மலேசிய பெற்றது என்று அவர்
குறிப்பிட்டார்.
அதில் 26,390 கோடி வெள்ளி (53.7 விழுக்காடு) மதிப்பிலான முதலீடுகள்
வெளிநாடுகளிலிருந்தும் 22,650 கோடி வெள்ளி (46.3 விழுக்காடு)
உள்நாட்டிலிருந்தும் பெறப்பட்டன என்று மக்களவையில் இன்று கேள்வி
நேரத்தின் போது அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நாடு பெற்ற அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகள் குறித்து
ஸ்டெபின் தொகுதி உறுப்பினர் சோங் சியேங் ஜென்
கேள்வியெழுப்பியிருந்தார்.
மலேசியாவில் செயல்படும் நிறுவனங்கள் நியாயமான முறையில்
நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அமெரிக்கா போன்ற அனைத்துலக
பங்காளிகளுடன் அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வருகிறது என்று
துணையமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
சீனா மற்றும் பிரிக்ஸ் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் தயாரிக்கும்
பொருள்களுக்கு வரி விதிக்க அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
டோனால்டு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில்
இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார் அவர்.


