ஷா ஆலம், டிச. 3 - இவ்வார இறுதியில் கடல் பெருக்கும் ஏற்படும்
அபாயத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து துப்புரவுப் பணியாளர்களின்
விடுமுறையையும் கும்புலான் டாருள் ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட்
நிறுவனம் (கே.டி.இ.பி.டபள்யூ.எம்.) முடக்கியுள்ளது.
மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குவியும் குப்பைகளை
அகற்ற 600 ரோரோ எனப்படும் குப்பைத் தொட்டிகள் ஏற்பாடு செய்யப்படும்
என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி முகமது
தாஹிர் கூறினார்.
எங்களின் அனைத்து தளவாடங்களும் தயார் நிலையில் உள்ளன. கடந்த வாரம் மேருவின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து
சேதமடைந்த பொருள்களை அகற்றுவதற்கு ஏதுவாக ஆங்காங்கே ரோரோ
குப்பைத் தொட்டிகளை வைத்துள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.
துப்புரவுப் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய குப்பை லோரிகள்
உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் பயன்படுத்துவதற்கு உகந்த
நிலையில் இருப்பதை உறுதி செய்துள்ளோம் என அவர் சொன்னார்.
இதனிடையே, அனைத்து பகுதிகளிலும் பராமரிப்பு மற்றும் குப்பை
அகற்றும் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மேற்கொள்ளப்படுவது
உறுதி செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
கடந்த வாரம் பெய்த அடைமழை மற்றும் கடல் பெருக்கு காரணமாக
மேரு உள்பட கிள்ளான் வட்டாரத்தின் பல பகுதிகளில் வெள்ளம்
ஏற்பட்டது.


