ஈப்போ, டிச. 3 - வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்திற்கு
வராமல் தங்கள் புகாரைச் செய்வதற்கு ஏதுவாக இங்குள்ள ஃபேர் பார்க்,
அரேனா காயாங்கான் புத்ராவில் நடமாடும் காவல் நிலையம்
அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் அந்த பேரிடரில் ஏற்பட்ட இதர
பாதிப்புகள் குறித்து அங்குள்ள சுமார் 600 குடியிருப்பாளர்கள் போலீசில்
புகார் செய்வதற்கு ஏதுவாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பேராக்
மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டிசிபி ஜூல்கிப்ளி சரியாட்
கூறினார்.
இந்த நடமாடும் காவல் நிலையம் நேற்று தொடங்கி வெள்ள நிலைமை
சீரடையும் வரை அங்கு செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நடமாடும் காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது தொடர்பான
தகவல்களை பொதுமக்கள் மத்தியில் பரப்புவதற்காக போலீஸ் ரோந்துக்
கார் ஒன்றும் அங்கு அனுப்பப்படும் என அவர் கூறினார்.
தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக கிந்தா ஆற்றில் நீர்
பெருக்கெடுத்தால் சுற்றுவட்டாரத்திலுள்ள குடியிருப்பு பகுதிகளில் சுமார்
ஒரு மீட்டர் அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இதற்கான காரணம் கண்டறியப்பட்டு சுமார்
30 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக ஏற்பட்டுள்ள இந்த வெள்ளம்
இனியும் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங்
கூறியிருந்தார்.
பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளை துப்புரவு செய்யும் பணி
மற்றும் அங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடும் படி ஈப்போ மாநகர் மன்றத்தை தாங்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக ஜூல்கிப்ளி தெரிவித்தார்.


