ஷா ஆலம், டிச. 3- இங்குள்ள மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின்
(யு.ஐ.டி.எம்.) ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் பிரிவு (பலாப்பெஸ்) மாணவர்
ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் மரணம் தொடர்பான விசாரணைக்கு
உதவுவதற்காக 34 பேரிடம் காவல் துறையினர் வாக்குமூலம் பதிவு
செய்துள்ளனர்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவர்களில் பயிற்சி அதிகாரிகள், மருத்துவ
அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் புகார்தாரர் உள்ளிட்ட ஒன்பது புதிய
சாட்சிகளும் அடங்குவர் என்று ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர்
ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.
விசாரணையை முடிப்பதற்கு முன்னர் மேலும் சில சாட்சிகளை
விசாரணைக்கு அழைப்போம். அதன் பின்னர் மேல் நடவடிக்கைகாக
விசாரணை அறிக்கையை மரண விசாரணை அதிகாரியிடம்
ஒப்படைப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.
அதுவரை, விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையிலான யூகங்களை
வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளும்படி அனைத்து தரப்பினரையும்
நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.
விசாரணையை மேற்கொள்ள போலீசாருக்கு கால அவகாசம் கொடுங்கள்.
இந்த வழக்கு தொடர்பான சமீபத்திய தகவல்களை நாங்கள் வழங்குவோம்
என அவர் சொன்னார். நேற்று இங்குள்ள மாநில போலீஸ்
தலைமையகத்தில் வழக்கு தொடர்பான பொருள்களை அழிக்கும் நிகழ்வை
பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
போலீசாரின் விசாரணை அறிக்கைக்காக மலேசிய ஆயுதப்படையும்
காத்திருப்பதாகக் கூறிய அவர், இதன் தொடர்பில் கைது அல்லது மேல்
நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அது குறித்து தெரிவிக்கப்படும் என்று
சொன்னார்.
வெப்ப பக்கவாதம் காரணமாக ஏற்பட்ட உடல் உறுப்பு செயலிழப்பினால்
அந்த மாணவர் நவம்பர் 13ஆம் தேதி உயிரிழந்ததாக சிலாங்கூர் போலீஸ்
தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் முன்னதாக கூறியிருந்தார்.


