ஈப்போ, டிச. 3- அரச பெலும் வனப்பகுதியில் கடந்த மாதம் 29ஆம் தேதி
பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் நீரில் மூழ்கி மாண்ட
வேளையில் மற்றொரு வீரர் வலுவான நீரோட்டத்தில் அடித்துச்
செல்லப்பட்டார்.
இச்சம்பவத்தில் லான்ஸ் கார்ப்ரல் முகமது அப்பாண்டி ஜாஹ்வின்
உயிரிழந்த வேளையில் லான்ஸ் கார்ப்ரல் அகமது ஜூல்ஹில்மி அகமது
தர்மிஸி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று காலை 8.56 மணியளவில் தாங்கள்
புகாரைப் பெற்றதாக கிரீக் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்
ஜூல்கிப்ளி மாமுட் கூறினார்.
இச்சம்பவம் கடந்த மாதம் 29ஆம் தேதி நிகழ்ந்தது தொடக்கக் கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும் இதர ஏழு
இராணுவ வீரர்களுடன் சுங்கை மேரா ஆற்றைக் கடக்க முயன்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் ஆற்றைக் கடக்க முடியாத நிலையில் வலுவான
நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் அரச
மலேசிய போலீஸ் படையும் மலேசிய ஆயுதப்படையும் ஈடுபட்டதாக
அவர் சொன்னார்.
காணாமல் போனவர்களில் ஒருவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்ட
வேளையில் மற்றொரு வீரரைத் தேடும் பணி தொடர்ந்து
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.


