ஷா ஆலம், டிச.3 - மாநிலத்தின் தென் பகுதியின் வளர்ச்சிக்கு தென்
சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டு மண்டலத் திட்டம் (இட்ரிஸ்) உந்து
சக்தியாக விளங்கும்.
இத்திட்டத்தின் வளர்ச்சியில் முதலீட்டாளர்கள் மற்றும்
மேம்பாட்டாளர்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்கு மாநில அரசு
பல்வேறு ஊக்குவிப்புச் சலுகைகளை வழங்கி வருவதாக முதலீட்டுத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தனது பேஸ்புக்
பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேம்பாட்டுக் கட்டணத்தை வட்டியின்றி தவணை முறையில்
செலுத்துவதற்கான வாய்ப்பு மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு வர்த்தக
லைசென்ஸ் கட்டண விலக்களிப்பு ஆகியவையும் அந்த சலுகைகளில்
அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
இதுதவிர, சிறப்பு பிரீமியத் திட்டத்தின் கீழ் நில பிரீமியத் தொகையை
மிச்சப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதோடு மூன்று ஆண்டுகள்
வரை நில வரியில் ஐம்பது விழுக்காடு கழிவும் வழங்கப்படுகிறது என்று
அவர் தெரிவித்தார்.
தற்போது இட்ரிஸ் திட்டத்தில் ஒன்பது திட்டங்கள் தீவிரமாக
மேற்கொள்ளப்பட்டு வருவதாக க் கூறிய அவர், இந்த கேந்திர
முக்கியத்தும் வாய்ந்த திட்டங்கள் வாயிலாக மாநிலத்தில் போட்டியிடும்
திறனை மேம்படுத்த இயலும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்வதற்கு
விரிவான முதலீட்டு ஊக்குவிப்பு தொகுப்புகளை வழங்குவதில் மாநில
அரசு கொண்டுள்ள கடப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என்று அவர்
சொன்னார்.
இதன் மூலம் நீடித்த வளர்ச்சியையும் சிலாங்கூர் மாநில மக்களின்
வாழ்க்கைத் தர உயர்வையும் உறுதிப்படுத்த இயலும் என்றார் அவர்.
மாநிலத்தில் சமநிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் அதிகமான
வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் 16,000 ஹெக்டர் நிலப்பரப்பில்
இட்ரிஸ் மேம்பாட்டுத் திட்டத்தை மாநில அரசு தொடக்கியுள்ளது.


