கோலாலம்பூர், டிச. 2 - கிளந்தான் மற்றும் திரங்கானுவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. ஒன்பது மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்றிரவு 140,896 பேராக இருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 138,052 பேராக குறைந்துள்ளது.
கிளந்தானில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 26,781 குடும்பங்களைச் சேர்ந்த 85,778 பதிவானது நேற்றிரவு 27,661 குடும்பங்களைச் சேர்ந்த 88,742 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியிருந்தனர். அவர்கள் அனைவரும் 251 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திரங்கானு மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் சமீபத்திய தரவுகளின்படி, திரங்கானு மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ள நிவாரண மையங்களின் எண்ணிக்கை 283ல் இருந்து 271 ஆகக் குறைந்துள்ளது.
உலு திரங்கானு, கெமாமன், செத்தியூ, கோல திரங்கானு, மாராங், டுங்குன் மற்றும் கோல நெருஸ், பெசுட் ஆகியவை பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆகும்
நெகிரி செம்பிலானில், கோல பிலா, தம்பின் மற்றும் ஜெம்போல் ஆகிய மாவட்டங்களில் உள்ள எட்டு நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 297 குடும்பங்களைச் சேர்ந்த 1,139 பேராக குறைந்துள்ளதாகப் பேரிடர் தகவல் அகப்பக்கம் தெரிவித்தது.


