கோலாலம்பூர், டிச. 2 - வெள்ளத்திற்குப் பிந்தைய தொடர் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
சில பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது என்ற தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியின் அறிக்கையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
இது (தொடர் நடவடிக்கை) நாம் தயாராக இருக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று. வெள்ளம் வடிந்தப் பின்னர் நிலைமையை சீர்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. அதனால்தான் பள்ளிகள், தற்காலிக நிவாரண மையங்கள், கழிவறை வசதிகள் மற்றும் பலவற்றை சரிசெய்ய கூடுதல் ஒதுக்கீடுகளை வழங்குகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்றுக்ஷிங்கு நடைபெற்ற பிரதமர் துறை ஊழியர்களுடனான மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார். துணைப் பிரதமர்களான ஜாஹிட், டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் மற்றும் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் கூடுதல் உடனடி ஒதுக்கீட்டை நேற்று அறிவித்தார் இதன்வழி ஒவ்வொரு மாநிலத்திற்கும் 2.5 கோடி வெள்ளி வழங்கப்படும். கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் வடிகால் அமைப்புகள் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை சரிசெய்வதற்கும் சாலையின் மட்டத்தை உயர்த்துவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
வெள்ளத்திற்குப் பிந்தைய தொடர் நடவடிக்கைகள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று அன்வார் கூறினார்.
சில பகுதிகளில் வெள்ள நீர் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியுள்ளது. ஆனால் இப்போது வெள்ள நீர் பகாங் மற்றும் ஜோகூர் நோக்கி பாய்கிறது. எனவே, நாடு முழுமைக்கும் முழு தயார்நிலை தேவை என்று ஜாஹிட் கூறினார்.
பல்வேறு ஏஜென்சிகளைச் சேர்ந்த மொத்தம் 82,000 பணியாளர்கள் நாடு முழுவதும் உள்ள வெள்ளப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அரசு சாரா நிறுவனங்கள், பெருநிறுவன அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட தன்னார்வலர்களும் உதவிக்கு வந்துள்ளனர்.


