ஷா ஆலம், டிச. 2- கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவரும் மாநில
மந்திரி புசாருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வகித்து வரும்
சிலாங்கூர் ஹராப்பான் தலைவர் பதவி மேலும் ஒரு தவணைக்கு
நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது மாநில நிர்வாகத்தில் உள்ள இரு ஆட்சிக்குழு
உறுப்பினர்கள் அந்த கூட்டணியின் உதவித் தலைவர்களாக
நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் பதவியை வகிக்கும் ஜசெகவைச் சேர்ந்த இங் ஸீ ஹான்
மற்றும் அமானா கட்சியின் பிரதிநிதியும் விவசாயம் மற்றும் அடிப்படை
வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான இஷாம் ஹஷிம்
ஆகியோரே துணைத் தலைவர்களா நியமனம் பெற்றவர்களாவர்.
இந்த நியமனத்தை சிலாங்கூர் ஹராப்பான் தலைமைத்துவ மன்றத்தின்
செயலாளர் முகமது கைருடின் ஓத்மான் அறிக்கை ஒன்றில்
உறுதிப்படுத்தினார். இந்த நியமனம் 2024/2025 தவணைக்கு அமலில்
இருக்கும்.
நேற்று இங்கு நடைபெற்ற அந்த கூட்டணியின் பேராளர் மாநாட்டில் இந்த
தலைமைத்துவ நியமனத்திற்கு அனைத்து 450 பேராளர்களும் ஏகமனதாக
ஆதரவு தெரிவித்தனர்.
இதனிடையே, ஹராப்பான் கூட்டணியின் மூன்று உதவித் தலைவர்களாக
வீடமைப்பு மற்றும் கலாசாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
பொர்ஹான் அமான் ஷா (கெஅடிலான்), கிள்ளான் நாடாளுமன்ற
உறுப்பினர் வீ. கணபதிராவ் (ஜசெக), ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர்
அஸ்லி யூசுப் (அமானா) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ஹராப்பான் கூட்டணியின் பொருளாளராக சுகாதாரம் மற்றும்
சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின்
(ஜசெக) நியமனம் பெற்றுள்ளார்.
இதர ஐந்து ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கும் ஹராப்பான் தலைமைத்துவ
மன்றத்தில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே, செர்டாங் சட்டமன்ற உறுப்பினரும் அமானா
பிரதிநிதியுமான அப்பாஸ் சலிமி அஸ்மி கூட்டணியின் தகவல் பிரிவுத்
தலைவராக பொறுப்பேற்றுள்ளார். முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்
யாக்கோப் சபாரி தேர்தல் அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார்.
இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுத் தலைவர்களாக பலாக்கோங் சட்டமன்ற
உறுப்பினர் வெய்ன் ஓங் சுன் (ஜசெக) மற்றும் ராவியா ஜக்காரியா
(அமானா) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


