ஷா ஆலம், டிச. 2- வெள்ளத்தினால் பாதிக்கப்படும் எஸ்.பி.எம். தேர்வு
எழுதும் மாணவர்களைத் தங்க வைப்பதற்கு பொருத்தமான விடுதி அல்லது ஆசிரமங்களை அடையாளம் காணும் பணியில் சிலாங்கூர் மாநில கல்வி இலாகா ஈடுபட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் வெளியிடும் தரவுகளின் அடிப்படையில்
வெள்ளம் ஏற்படும் என கணிக்கப்படும் இடங்களில் இந்த ஆசிரமங்களை
அடையாளம் காண்பதில் கவனம் செலுத்தப்படும் என்று மாநில கல்வி
இலாகா இயக்குநர் டாக்டர் ஜெப்ரி அபு கூறினார்.
இன்று எஸ்.பி.எம். வாய்மொழித் தேர்வு தொடங்குகிறது. இது வரை எந்த
மாணவரும் வெள்ளத்தினால் பாதிக்கப்படவில்லை. மேரு, சுங்கை
பிஞ்சாய் தேசியப் பள்ளியில் தங்கியிருந்தவர்களும் இல்லம் திரும்பி
விட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
அனைத்து நடவடிக்கைகளும் கல்வியமைச்சின் சீரான செயலாக்க
நடைமுறையின் (எஸ்.ஒ.பி.) படி மேற்கொள்ளப்படும். இவ்விவகாரம்
தொடர்பில் நேற்று உயர்மட்ட நிர்வாகத்தினருடன் நாங்கள் பேச்சு
நடத்தினோம் என்று அவர் சிலாங்கூர்கினிக்கு அளித்த பேட்டியில்
குறிப்பிட்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து எஸ்.பி.எம். மாணவர்களும் தயார்
செய்யப்பட்டுள்ள தங்குமிடங்களுக்கு செல்லும்படி பணிக்கப்பட்டுள்ளதாக
கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் நேற்று கூறியிருந்தார்.
தேர்வு சீராக நடைபெறுவதை உறுதி செய்ய மாணவர்களை தங்கும்
விடுதிகளில் தங்குவதற்கு அனுமதிப்பது தொடர்பில் பெற்றோர்களுடன்
தமது தரப்பு பேச்சு நடத்தி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வை எழுத 402,956 மாணவர்கள் பதிவு
செய்துள்ளனர். மலாய் வாய்மொழித் தேர்வு இன்று தொடங்கி வரும்
வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வு இம்மாதம் 2ஆம் தேதி தொடங்கி
அடுத்தாண்டு பிப்ரவரி 6ஆம் தேதி வரை நடைபெறும்.


