கோலாலம்பூர், டிச.2- பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடுவது, 2015-2025
மலேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் (உயர்கல்வி) அடைவு நிலை
மற்றும் நாட்டின் நுழைவாயில்களில் தானியங்கி கடப்பிதழ் ஸ்கேன்
இயந்திரச் சேவை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இன்றைய
மக்களவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
கல்வியை பாதியில் கைவிடும் பிரச்சினைக்குத் தீர்வு காண முதலாம்
படிநிலை மாணவர்களுக்கான பாடத்திட்ட இடையீட்டுத் திட்ட
அமலாக்கத்தின் நடப்பு நிலவரம் குறித்து ஆயர் ஹீத்தாம் தொகுதி தேசிய
முன்னணி உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங்
கல்வியமைச்சரிடம் கேள்வியெழுப்புவார்.
மேலும், கல்வி தர மறு நிர்ணயத்தின் நேர்மறைத் தாக்கம் மற்றும் ஆரம்ப
மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணிதப்
பாடங்களைப் போதிப்பதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சுமை குறித்தும்
அவர் வினா தொடுப்பார்.
2015-2025 மலேசிய கல்வி மேம்பாட்டு திட்டத்தின் இவ்வாண்டு ஆகஸ்டு
மாதம் வரையிலான அடைவு நிலை குறித்து கெமமான் தொகுதி
பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது சம்சுரி
மொக்தார் உயர்கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்புவார்.
அந்நிய நாட்டு சுற்றுப்பயணிகளின் வருகையை எளிதாக்குவதற்கு ஏதுவாக
விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் உள்பட நாட்டின் அனைத்து
நுழைவாயில்களிலும் தானியங்கி கடப்பிதழ் ஸ்கேன் இயந்திரங்களின்
எண்ணிக்கைய அதிகரிப்பதற்கும் சேவையை வலுப்படுத்துவதற்கும்
எடுக்கப்பட்ட நடவடிக்கைள் குறித்து ஜெலுத்தோங் தொகுதி ஹராப்பான்
உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் உள்துறை அமைச்சரிடம் விளக்கம்
கோருவார்.
எதிர்வரும் 2061ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆயிரம் காலனுக்கும் மூன்று
காசு என்ற விகிதத்தில் நீரை நியோகிக்கப்பதற்கு வகை செய்யும் 1962ஆம்
ஆண்டு சுங்கை ஜோகூர் ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வது தொடர்பில்
மலேசியா சிங்கப்பூருடன் விவாதிக்குமா என்று பாசீர் கூடாங் பக்கத்தான்
ஹராப்பான் உறுப்பினர் ஹசான் அப்துல் கரீம் எரிசக்தி மாற்றம் மற்றும்
நீர் உருமாற்றத் துறை அமைச்சரிடம் கேள்வியெழுப்புவார்.


