கோலாலம்பூர், டிச.2- இணைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஏதுவாக
இணையக் குற்றங்களைத் துடைத்தொழிப்பதில் தீவிர முனைப்பு காட்டி
வரும் மடாணி அரசு, இதன் தொடர்பில் இரு சட்ட மசோதாக்களை இன்று
மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளது.
2024 தொடர்பு மற்றும் பல்லுடக (திருத்தம்) மசோதா (சட்டம் 588) மற்றும்
2024 தொடர்பு மற்றும் பல்லுடக ஆணைய சட்ட மசோதா (திருத்தம்)
ஆகியவையே அவ்விரு மசோதாக்களாகும்.
மக்களவையில் இன்று வாய்மொழி கேள்வி அமர்வுக்குப் பிறகு இவ்விரு
சட்ட மசோதாக்களையும் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில்
முதல் வாசிப்புக்காக அவையில் தாக்கல் செய்வார்.
இந்நாட்டில் இலக்கவியல் சூழல் துரித வளர்ச்சி காண்பதையும்
இணையக் குற்ற அச்சுறுத்தல்களிலிருந்து அவை விடுபட்டிருப்பதையும்
உறுதி செய்யும் நோக்கில் அரசாங்கம் இவ்விரு சட்ட மசோதாக்களையும்
தாக்கல் செய்கிறது.
இணையக் குற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகளை துடைத்தொழிப்பதில்
அரசாங்கம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது
என்றும் பயனீட்டாளர்களுக்கு பாதுகாப்பான தளமாக இணையம்
விளங்குவதை அது உறுதி செய்யும் என்றும் அமைச்சர் முன்னதாக
கூறியிருந்தார்.
கடந்த 26 ஆண்டுகளாக அமலில் இருந்த சட்டம் 588இல் செய்யப்படும்
திருத்தங்கள் இணையம் தவறான நோக்கத்திற்குப் பயன்டுத்தப்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக பிரிவு 233 பயன்பாட்டு கோணத்தை விரிவாக்குவதையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும், சமூக ஊடகங்கள், தொழிலியில் வளர்ச்சி மற்றும் இணைய
ஒருங்கமைப்பு பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களையும் இந்த திருத்தம்
கவனத்தில் கொண்டுள்ளது.


