கோத்தா பாரு, டிச.2- ‘ஓப் மூர்னி‘ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆயுதப்
படையின் டிரக் ஒன்று வெள்ளத்தை கடந்து கொண்டிருந்த போது வழுக்கி
சாலையை விட்டு விலகியது.
எனினும், ரந்தாவ் பாஞ்சாங்கில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது அந்த
டிரக்கில் பயணித்த எஸ்.பி.எம். மாணவர்கள் காயமின்றி தப்பினர்.
அந்த ஏழு டன் டிரக் வெளியே கொண்டு வரப்பட்டு மீண்டும் சேவையில்
ஈடுபடுத்தப்பட்டதாக மலேசிய காலாட் படையின் இரண்டாம் டிவிஷன்
பட்டாளம் அறிக்கை ஒன்றில் கூறியது.
இந்த மீட்பு நடவடிக்கை அனைத்து மாணவர்களுக்கும் எந்த பாதிப்பும்
ஏற்படாத வகையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்று அந்த
தெரிவித்தது.
வெள்ளம் சூழ்ந்த சாலையில் பயணித்துக் கொண்டிருந்த அந்த டிரக்
திடீரென வழுக்கி சாலையை விட்டு விலகியது என அந்த அறிக்கை
குறிப்பிட்டது.
முன்னதாக, வெள்ளம் காரணமாக ரந்தாவ் பாஞ்சாங்கில் சிக்கிக் கொண்ட
300 எஸ்.பி.எம். மாணவர்களை இடம் மாற்றும் நடவடிக்கையில் மலேசிய
ஆயுதப்படையின் எட்டாவது காலாட் படைப் பிரிவு ஈடுபட்டு வந்தது.
வெள்ளம் சூழ்ந்த இரு இடங்களைக் கடக்க வேண்டிய சூழல் காரணமாக
காலை 7.00 மணிக்கு தொடங்கிய இப்பணி முற்றுப் பெறுவதற்கு ஐந்து
மணி நேரம் பிடித்தது.
எஸ்.பி.எம். மாணவர்களை இடம் மாற்றும் இப்பணியில் 11 இராணுவ
டிரக்குகள் மற்றும் 11 போர் படகுகள் பயன்படுத்தப்பட்டன.


