புத்ராஜெயா, டிசம்பர் 1 - கிளந்தான், திரங்கானு மற்றும் கெடா உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் 2024 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். மலாய் வாய்மொழித் தேர்வை நாளை முதல் வரும் வியாழன் (டிசம்பர் 5) வரை திட்டமிட்டபடி நடைபெற உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. .
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (நட்மா) ஆலோசனையைப் பின்பற்றி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
வரும் 2025 பிப்ரவரி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வடகிழக்குப் பருவமழை நிலைமை குறித்த மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் முன்னறிவிப்புகளின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார்
"ஓப்ஸ் பாயோங்" நிலையான செயலாக்க நடைமுறைகள் (எஸ் ஒ.பி.) மற்றும் வடகிழக்கு பருவமழையை சமாளிக்கும் செயல் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வெள்ள சூழ்நிலைகளில் தேர்வுகளை நடத்த கல்வியமைச்சு தயாராக உள்ளது.
எஸ்.பி.எம். தேர்வுகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய நட்மா, மலேசிய ஆயுதப் படைகள் மற்றும் குடிமைத் தற்காப்புப் படை போன்ற ஏஜென்சிகளுடன் கல்வியமைச்சு இணைந்து அமைச்சு செயல்படுகிறது என்று அவர் இங்கு வெள்ள மேலாண்மை மற்றும் எஸ்.பி.எம். தேர்வுக்கான தயார் நிலை குறித்த சிறப்பு செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார்.
மூன்று மாநிலங்களில் மொத்தம் 5,377 எஸ்.பி.எம். வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் 3,111 பேர் கிளந்தான் மாநிலத்தையும் 1,734 பேர் திரங்கானுவையும் 532 பேர் கெடாவையும் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தேர்வு அதிகாரிகளும் தங்கும் விடுதிகளில் தங்கவைக்கப் படுவார்கள் அல்லது மாற்றுத் தேர்வு மையங்களுக்கு மாற்றப்படுவார்கள். நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி தேர்வு நடைபெறுவதை இவர்கள் உறுதி செய்வார்கள் என்றார் அவர்..


