குவாந்தான், டிச. 1- நேற்று மாலை தொடங்கி தொடர்ந்து பெய்த அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ரவூப் மாவட்டத்திலுள்ள பல சாலைகள் இலகு ரக வாகனங்களுக்கு மூடப்பட்டன.
கோல லிப்பிஸ்- கோத்தா பாரு சாலையின் 334 முதல் 242வது கிலோ மீட்டர் வரையிலான பகுதி மற்றும் ஜாலான் செரோ-செசிங் சாலையின் கெசிங் பாலம் ஆகியவையே பாதிக்கப்பட்ட சாலைகளாகும் என்று ரவுப் மாவட்ட போலீஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றில் கூறியது.
நேற்று மாலை 6.00 மணி தொடங்கி இன்று வரை தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ரவூப் மாவட்டத்தின் பல சாலைகள் இன்று காலை தொடங்கி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அது குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட சாலைகளை ரவூப் மாவட்ட போக்குவரத்து போலீசார் கண்காணித்து வரும் வேளையில் கனரக வாகனங்களுக்கு மட்டுமே அச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
நாட்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் பகாங் புதிதாக இணைந்துள்ளது. இன்று காலை 10.15 மணி நிலவரப்படி ரவூப் மற்றும் லிப்பிஸ் மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள 19 துயர் துடைப்பு மையங்களில் 185 குடும்பங்களைச் சேர்ந்த 579 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


