ஜாகர்த்தா, டிச.1- ரோஹிங்யா அகதிகள் பயணம் செய்த படகு மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கிய நிலையில் மொத்தம் 110 அகதிகள் ஆச்சே மாநிலத்தின் கடற்கரையில் அடைக்கலம் நாடியதாக அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனப் பிரதிநிதிகளும் இந்தோனேசிய அதிகாரிகளும் கூறினர்.
அந்த தென்கிழக்காசிய நாட்டிற்கு கடல் மார்க்கமாக வரும் ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. பெரும்பாலும் முஸ்லீம்களைக் கொண்ட இந்த ரோஹிங்யாக்கள் உலகில் அதிக எண்ணிக்கையிலான நாடற்றவர்களாக கருதப்படுகிறார்கள்.
மோசமான நிலையிலுள்ள அதிகதிகள் முகாமிலிருந்து தப்பும் நோக்கில் கடல் அமைதியாக காணப்படும் அக்டோபர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் படகுகளில் மூலம் தாய்லாந்து அல்லது முஸ்லீம்கள் அதிகம் வாழும் மலேசியா மற்றும் இந்தோனோசியாவுக்கு அவர்கள் பயணம் மேற்கொள்வது வழக்கமாகும்.
கடந்த மாதம் சுமார் 400 ரோஹிங்யா அகதிகள் ஆச்சே மற்றும் வட சுமத்தரா வந்தடைந்தனர்.
அவர்கள் பயணம் செய்த படகு பழுதடைந்ததைத் தொடர்ந்து பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறார்கள் அடங்கிய அந்த அகதிகள் கரைக்கு கொண்டு வரப்பட்டதாக கிழக்கு ஆச்சே பிராந்திய அரசாங்க அதிகாரி ஷம்சுல் பாஹ்ரி கூறினார்.
அந்த அகதிகள் பயணம் செய்த படகு மோசமான பழுது காரணமாக மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கிய நிலையில் அங்கிருந்த மீனவர்கள் அவர்களைக் காப்பாற்றியதாக அவர் தெரிவித்தார்.
மொத்தம் 116 அகதிகள் இந்தோனேசிய கரையை அடைந்ததாக அகதிகளுக்கான ஐ.நா. அதிகாரி ஃபைசால் ரஹ்மான் சொன்னார்
பௌத்த சமயத்தினரை பெரும்பான்மையினராக கொண்ட மியன்மார் நாட்டில் ரோஹிங்யாக்கள் தெற்காசியாவைச் சேர்ந்த அந்நிய நாட்டினராக கருதப்படுவதோடு அவர்களுக்கு குடியுரிமையும் மறுக்கப்படுகிறது.


