கோத்தா பாரு, டிச.1- வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட
பாசீர் மாஸ் மாவட்டத்தின் ரந்தாவ் பாஞ்சாங்கில் மாரடைப்புக்கு உள்ளான
ஆடவர் ஒருவர் அரச மலேசிய போலீஸ் படையின் வான் போக்குவரத்து
குழுவின் (பிஜியு) துரித நடவடிக்கையால் உயிர்ப்பிழைத்தார்.
பாதிக்கப்பட்ட அந்த ஆடவர் ரந்தாவ் பாஞ்சாங் குவால் திங்கி தேசியப்
பள்ளியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெங்கலான் செப்பா, பொது
தற்காப்பு படையின் 8வது படைப்பிரிவு முகாமுக்கு கொண்டு வரப்பட்டு
அங்கிருந்து கோத்தா பாரு ராஜா பெரெம்புவான்11 மருத்துவமனைக்கு
ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுச் செல்லப்பட்டதாக அரச மலேசிய போலீஸ்
படை இண்ட்ஸ்டாகிராம் மூலம் வெளியிட்ட பதிவொன்றில் கூறியது.
இருதய நோயினால் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றும் முயற்சியாக அவரை
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியே கொண்டு வரும்
பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர் மருத்துவ
சிகிச்சையின் மூலம் நோயிலிருந்து குணமடைய அரச மலேசிய போலீஸ்
படை உறுப்பினர்கள் பிரார்த்திக்கின்றனர் என்று அப்பதிவு குறிப்பிட்டது.
வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதியில் உச்சக்கட்டத்தை அடையும்
என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மலேசியா-தாய்லாந்து
எல்லை, கிழக்கு கரை மாநிலங்கள் மற்றும் சபா, சரவாவில் கடுமையாக
மழை பெய்து வருகிறது.


