மலாக்கா, நவ. 29 - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் போதுமான அளவு அத்தியாவசிய உணவுப் பொருள்களின் கையிருப்பு உள்ளது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு உறுதியளித்துள்ளது.
வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் விநியோகம் துண்டிக்கப்படும் சாத்தியத்தை கருத்தில் கொண்டு அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பை 30 சதவிகிதம் வரை அதிகரிக்க மொத்த விற்பனையாளர்களுக்கு சிறப்பு உரிமத்தை அமைச்சு வழங்கியுள்ளது என்று துணையமைச்சர் டாக்டர் புஸியா சாலே கூறினார்.
நாங்கள் குறைந்தது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே தயாராகி வருகிறோம். தற்போது வெள்ளம் காரணமாக கிளந்தான் தற்போது முற்றுகைக்கு உள்ளாகியுள்ளாகியுள்ளது. அங்கு பொருட்கள் வருவதில் சிரமம் உள்ளதை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் அவர்கள் (மொத்த விற்பனையாளர்கள்) போதுமானது என்று நாங்கள் நம்பும் அளவுக்கு கையிருப்புடன் தயாராக உள்ளனர்.
அந்தந்த பகுதிகளில் விநியோகம் ஏற்கனவே தயாராக இருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் மாநிலங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
வெள்ளம் காரணமாக இன்று காலை நிலவரப்படி கிளந்தான், திரங்கானு, கெடா, பெர்லிஸ், நெகிரி செம்பிலான், பேராக் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாதிலங்களில் 22,669 குடும்பங்களைச் சேர்ந்த 73,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


