கோலாலம்பூர், நவ. 29 - இரண்டு லட்சம் வெள்ளிக்கும் மேல் மதிப்பு
கொண்ட நகைகளை நம்பிக்கை மோசடி மோசடி செய்ததாக நகைக் கடை
ஒன்றின் முன்னாள் விற்பனை பிரதிநிதி ஒருவருக்கு எதிராக இங்குள்ள
செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இவ்வாண்டு பிப்ரவரி மற்றும் ஜூலை மாத த்திற்கும் இடையே தலைநகர்
ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள நகைக்கடை ஒன்றில் 230,264
வெள்ளி மதிப்பிலான நகைகளை மோசடி செய்ததாக ஏ.மித்ரா தாரன்யா
குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு முதல் 14 ஆண்டு வரை
சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும்
குற்றவியல் சட்டத்தின் 408வது பிரிவின் கீழ் அவருக்கு எதிராக
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவரை 60,000 வெள்ளி ஜாமீன் தொகையில்
விடுவிக்கவும் கூடுதல் நிபந்தனையாக வழக்கு முடியும் வரை
அருகிலுள்ள காவல் நிலையத்தில் மாதம் ஒருமுறை கையெழுத்திடவும்
சாட்சிகளுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என நீதிமன்றம்
உத்தரவிடவும் வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் எம். சரவணன்
கேட்டுக் கொண்டார்.
தனது கட்சிக்காரர் தற்போது பல்பொருள் விற்பனை மையத்தில்
பணியாளராக தற்போது வேலை செய்து வருவதோடு குடும்பத்தை
பராமரிக்க வேண்டிய பொறுப்பிலும் உள்ளதால் குறைந்த பட்ச ஜாமீன்
தொகையை நிர்ணயிக்கும்படி மித்ராவின் வழக்கறிஞர் குர்ஷாரோன் கவுர்
நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் நாற்பதாயிரம்
வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி அஸ்ருள் டாருஸ், மாதம் ஒரு முறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவிட்டார். இந்த வழக்கு அடுத்தாண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.


