கோலாலம்பூர், நவ. 29 - உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் அளவுக்கு தங்கள்
பிள்ளையின் பராமரிப்பில் அலட்சியம் காட்டியதாக சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டை மறு ஆய்வு செய்யக் கோரி ஜைன் ரய்யான் அப்துல்
மாத்தினின் பெற்றோர் சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்தில் மனு
செய்துள்ளனர்.
இந்த மனு கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டதாக
ஜைம் இக்வான் ஜஹாரி மற்றும் இஸ்மானிரா அப்துல் மானாப்பை
பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் ஃபாஹ்மி அப்துல் மோய்ன் கூறினார்.
எனது கட்சிக்காரர்கள் இருவருக்கும் எதிராக கொண்டு வரப்பட்ட
குற்றச்சாட்டை சட்டத் துறை தலைவர் மறு ஆய்வு செய்ய வேண்டும்
எனக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளேன் என அந்த வழக்கறிஞர்
பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
இந்த வழக்கு பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த
செப்டம்பர் 18ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இக்குற்றச்சாட்டு
தொடர்பில் சட்டத் துறை தலைவர் அலுவலகத்தில் தாங்கள் மனு
செய்யவுள்ளதாக பிரதிவாதிகளின் வழக்கறிஞர் கூறினார். இதனைத்
தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு தொடர்பான மேலாண்மை வழக்கை வரும்
டிசம்பர் 6ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி நண்பகல் 12.00 மணிக்கும்
மறுநாள் இரவு 9.55 மணிக்கும் இடையே ஆட்டிஸம் குறைபாடு உள்ள
தனது மகனை கவனிப்பதில் அலட்சியம் காட்டியதன் மூலம் அவருக்கு
உடல் ரீதியாக கடுமையான காயங்கள் ஏற்பட காரணமாக இருந்ததாக
அச்சிறுவனின் பெற்றோர்களான ஜைம் இக்வான் மற்றும் இஸ்மானிரா
மீது கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி இங்குள்ள செஷன்ஸ்
நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இரு தினங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட
ஜைன் கடந்தாண்டு டிசம்பர் 6ஆம் தேதி டாமான்சாரா டாமாய், இடாமான்
அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள நீரோடையோரம் இறந்த நிலையில
கண்டு பிடிக்கப்பட்டார்.


