ஷா ஆலம், நவ 29: நேற்று மாலை முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஜாலான் மேரு -பண்டார் செத்தியா ஆலமில் வெள்ளம் ஏற்பட்டது. அந்த திடீர் வெள்ளப்பெருக்கில் இரண்டு கார்கள் சிக்கி கொண்டன.

இச்சம்பவம் குறித்து இரவு 7.53 மணிக்கு தனது தரப்பிற்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

"புக்கிட் ஜெலுதோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (பிபிபி) மொத்தம் ஐந்து உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்," என்று அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

நேற்றிரவு மாநில பேரிடர் மேலாண்மைப் பிரிவு, திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு தகவல் அளித்தது. அதில் தாமான் டயா மேரு, பெக்கான் மேரு மற்றும் தாமான் புக்கிட் ஹிஜாவ், கோலா சிலாங்கூர் ஆகிய இடங்கள் அடங்கும்.

மேலும், இன்று அதிகாலை 1 மணி வரை சிலாங்கூர் முழுவதும் கனமழை தொடரும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.