சிரம்பான், நவ. 29 - இன்று அதிகாலை கெமஞ்சே, ஜாலான் புக்கிட் ரோக்கான் என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பயணித்த பல்நோக்கு வாகனம் (எம்பிவி) வலுவான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அவர்கள் அனைவரும் பதட்டமான தருணத்தை எதிர்கொண்டனர்.
நான்கு வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் நள்ளிரவு 12.,00 மணியளவில் ஜெலாயிலிருந்து புக்கிட் ரோக்கன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக கெமெஞ்சே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் நோர்பைசால் அகமது தெரிவித்தார்.
தந்தை காரைத் தள்ளுவதைக் கண்ட அப்பகுதியை கடந்து சென்ற பொதுமக்கள் அவருக்கு உதவ முயன்றார். ஆனால், நீரோட்டம் மிகவும் வலுவாகவும் ஆழமாகவும் இருந்ததால் அம்முயற்சி தோல்வியடைந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 3.00 மணியளவில் காரிலிருந்த தம்பதியரின் மூன்று பிள்ளைகள் உட்பட நான்கு குடும்ப உறுப்பினர்களை காப்பாற்றினர் என்று அவர் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் நீரோட்டத்தின் மையத்தின் மையப் பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட தந்தையை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு காப்பாற்றினோம். பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.
இந்த நடவடிக்கையில் நீர் மிகவும் வலுவாகவும் ஆழமாகவும் இருந்ததால் தனது தரப்பு பெரும் சவால்களை எதிர்கொண்டதாகவும், நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனத்தைக் கண்டுபிடிக்க பாதுகாப்பான வழியைப் பயன்படுத்த வேண்டியிருந்ததாகவும் அவர் கூறினார்.


