கோலாலம்பூர், நவ. 29 - தொடர் மழையால் நாட்டின் பல மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்துள்ளது
இன்று காலை நிலவரப்படி கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 59,232 பேர் 221 தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். நேற்றிரவு 207 நிவாரண மையங்களில் 50,947 பேர் மட்டுமே மட்டுமே தங்கியிருந்தனர்.
திரங்கானுவில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 5,916 குடும்பங்களைச் சேர்ந்த 20,911 பேர் 232 துயர் துடைப்பு மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று இரவு 8 மணி அளவில் இந்த எண்ணிக்கை 17,762 பேராக இருந்தது.
கெடாவில், நேற்று இரவு 717 குடும்பங்களைச் சேர்ந்த 2,210 பேராக இருந்த வெள்ள அகதிகள் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1,432 குடும்பங்களைச் சேர்ந்த 4,378 பேராக உயர்வு கண்டுள்ளது.
அதே சமயம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, பெர்லிஸில் 145 குடும்பங்களைச் சேர்ந்த 488 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு 125 குடும்பங்களைச் சேர்ந்த 415 பேர் மட்டுமே தங்கியிருந்தனர்.
இதனிடையே, பேராக் மாநிலத்தில் மேலும் ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகம் கூறியது.
இன்று காலை முதல் செயல்படும் அந்த மையத்தில் மூவர் தங்கியுள்ளனர் .
மேலும், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் கிரியானில் உள்ள பாயிட் ஹாஜி அமான் தேசியப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் 15 குடும்பங்களைச் சேர்ந்த 49 பாதிக்கப்பட்டவர்கள் பாடாங் பாத்தாங்கில் உள்ள டேவான் செர்பகுனா கம்போங் கிளா பாரு நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
நெகிரி செம்பிலானில் காலை 8.30 மணி நிலவரப்படி, கோல பிலா மற்றும் தம்பின் ஆகிய இரண்டு மாவட்டங்களில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 291 பேர் எட்டு நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.


