பெட்டாலிங் ஜெயா, நவ. 29 - பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம்
(எம்.பி.பி.ஜே.) கடந்த 2022ஆம் ஆண்டு முதல் நடத்தி வரும் குறு
தொழில்முனைவோருக்கான மேம்பாட்டுப் பயிற்சிகள் வழி 4,776 பேர்
பயன்பெற்றுள்ளனர்.
இந்த பயிற்சிகளில் டிஜிட்டல் சந்தை முறை, நிதி மேலாண்மை மற்றும்
ஒருவருடன் ஒருவர் என்ற அடிப்படையிலான பயிற்சி ஆகிய
அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா
டத்தோ பண்டார் முகமது ஜாஹ்ரி சமிங்கோன் கூறினார்.
இது தவிர, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப பயன்பாடு, மெனு
பொறியியல், லைசென்ஸ் பின்பற்றல் நிபந்தனைகள் குறித்தும்
வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
டிஜிட்டல்மயம், உற்பத்தி, தயாரிப்பு பொருள்களின் தர உயர்வு, சிறப்பான
நிதி மேலாண்மை ஆகியவற்றில் தொழில்முனைவர் அறிவாற்றலை
மேம்பம்படுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பினை இந்த பயிற்சிகள்
வழங்கின என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்குள்ள எம்.பி.பி.ஜே. பெங்கியூட் மண்டபத்தில் நடைபெற்ற
2024ஆம் ஆண்டிற்கான சாத்தியமுள்ள தொழில்முனைவோர் விருதளிப்பு
விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார். இந்த நிகழ்வுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டுத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி தலைமை
தாங்கினார்.
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில்
உள்ள தொழில் முனைவோரின் சாதனைகளை அங்கீரிக்கும் வகையில்
இந்த சாத்தியமுள்ள தொழில்முனைவோர் விருதளிப்பு நிகழ்வை தாங்கள்
நடத்தி வருவதாக ஜாஹ்ரி கூறினார்.


