கோலாலம்பூர், நவ. 28 - நாட்டில் ஏற்படும் பெரும்பாலான திடீர் வெள்ளப் பாதிப்புகளுக்கு வடிகாலில் ஏற்படும் அடைப்பு மற்றும் வடிகால் அமைப்பு போன்ற தூய்மைப் பிரச்சினைகள் காரணமாக உள்ளன என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை துணை அமைச்சர் டத்தோ அய்மான் அதிரா சாபு கூறினார்.
திடீர் வெள்ளப் பிரச்சினைக்கு கூட்டாக தீர்வு காண்பதற்கு சமூக அளவில் பொது விழிப்புணர்வு தேவை என்று அவர் தெரிவித்தார்.
இது ஒரு விழிப்புணர்வு அழைப்பு... கோலாலம்பூரில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு உண்மையான காரணம் வடிகால் அடைப்பாகும். எனவே நாம் பொது விழிப்புணர்வை (தூய்மையின் முக்கியத்துவம் குறித்து) அதிகரிக்க முடிந்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும் குறிப்பிட்டார்.
மக்களவையில் இன்று வெள்ளப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சு மற்றும் பிற அரசு நிறுவனங்களின் முன்னெடுப்புகள் குறித்து குவாந்தான் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் வான் ரசாலி வான் நோர் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜப்பானில் பயன்படுத்தப்படுவதைப் போல் தண்ணீரைத் திசைதிருப்பும் தொழில்நுட்பம் அல்லது வடிகால் அமைப்பு முறையை அரசாங்கம் பயன்படுத்துமா என்று வான் ரசாலி எழுப்பிய கேள்விக்கு, அது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்று அவர் பதிலளித்தார்.
இதற்கு நிறைய பணம் செலவாகும். ஆனால் அது பரவாயில்லை, ஏனென்றால் திடீர் வெள்ளப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான எ பணிகளை மேம்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம் என்று அவர் கூறினார்.
திடீர் வெள்ள மேலாண்மையை வலுப்படுத்துவதற்காக வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வடிகால் அமைப்புகளை மேம்படுத்த ஊராட்சி மன்றங்களுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அய்மன் அதிரா மேலும் சொன்னார்


