NATIONAL

கோத்தா கெமுனிங் தொகுதியில் வெள்ளம், போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வு காண பிரகாஷ் வலியுறுத்து

28 நவம்பர் 2024, 7:25 AM
கோத்தா கெமுனிங் தொகுதியில் வெள்ளம், போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வு காண பிரகாஷ் வலியுறுத்து

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், நவ. 28 - கோத்தா கெமுனிங் தொகுதியில் நிலவி வரும்

வெள்ளம் மற்றும் போக்குவரத்து நெரிசல் தொடர்பான பிரச்சனைகளுக்கு

விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்று தொகுதி சட்டமன்ற

உறுப்பினர் எஸ். பிரகாஷ் மாநில சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

மாநில அரசின் அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில்

அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் வாயிலாக இப்பிரச்சனைகளுக்குத்

தீர்வு காணப்படும் என தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

தாமான் ஸ்ரீ மூடாவில் ஐந்து மடங்கு அதிக நீரை இறைத்து வெளியேற்றும் திறன் கொண்ட மூன்று ஸ்குரு பம்ப்களை அமைத்த மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், அந்த குடியிருப்பு பகுதியில உள்ள வடிகால்கள் சீரமைக்கப்பட அவசியத்தையும்

வலியுறுத்தினார்.

குறிப்பாக, ஸ்ரீ மூடா, ஜாலான் காகா 25/99 சாலையில் ஈராண்டுகளுக்கு

முன்னர் தொடங்கப்பட்ட வடிகால் திட்டம் இன்று வரை பூர்த்தி

செய்யப்படாமலிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சம்பந்தப்பட்ட ஊராட்சி

மன்றம் அந்த பணியை முடிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க

வேண்டும் என வலியுறுத்தினார்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் 2025ஆம் ஆண்டிற்கான

விநியோக மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு

உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இத்தொகுதியில் உள்ள தாமான் பூங்கா இண்டா, தாமான் புக்கிட்

கெமுனிங், புக்கிட் கெமுனிங் தொழில்பேட்டை, கோத்தா கெமுனிங்

கிரீன்வேல் ஆகியவை புதிய வெள்ள அபாயப் பகுதிகளாக

உருவாகியுள்ளதை கருத்தில் கொண்டு மாநில அரசு அடுத்தாண்டு வரவு

செலவுத் திட்டத்தில் செய்யப்பட்ட ஒதுக்கீட்டின் மூலம் இப்பிரச்சனைக்குத்

தீர்வு காண வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

அதே போல், கோத்தா கெமுனிங் குடியிருப்பு பகுதியும் மோசமான

போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை எதிர்நோக்கி வருகிறது.

பெர்சியாரான் அங்கிரிக் மொக்கரா சாலையில் மேம்பாலம் அமைப்பது

தொடர்பான ஆய்வினை ஷா ஆலம் மாநகர் மன்றம் மேற்கொண்டு

வருகிறது. அங்கு மேம்பாலம் எப்போது அமைக்கப்படும் என்பதுதான்

தற்போதைய கேள்வியாக உள்ளது.

ஆகவே, சாலை நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் எல்.ஆர்.டி. மற்றும்

எம்.ஆர்.டி. சேவைகளை கோத்தா கெமுனிங் பகுதிக்கு விரிவுபடுத்துவது

குறித்து போக்குவரத்து அமைச்சுடன் மாநில அரசு கலந்தாலோசிக்க

வேண்டும் என பிரகாஷ் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.