NATIONAL

சம்பள பாக்கியை வழங்க இணைய ஊடகங்களுக்கு இறுதி வாய்ப்பு - ஃபாஹ்மி

28 நவம்பர் 2024, 7:03 AM
சம்பள பாக்கியை வழங்க இணைய ஊடகங்களுக்கு இறுதி வாய்ப்பு - ஃபாஹ்மி

கோலாலம்பூர், நவ. 28 – ஊடகவியலாளர்களுக்கு  சம்பளம் வழங்கப்படாதது  தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு மூன்று  இணைய செய்தித் தளங்களின் நிர்வாகத்தை இன்று தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் சந்திக்கவுள்ளார்.

இவ்விவகாரம் குறித்து  தனது வருத்தத்தை வெளிப்படுத்திய ஃபாஹ்மி, பத்திரிகையாளர்கள் உட்பட தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகள் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங்குடன்  இணைந்து நிலைமையை தாம்  அணுக்கமாகக்  கண்காணிப்பதாகக் கூறினார்.

நான் அவர்களுக்கு இறுதி வாய்ப்பை வழங்குகிறேன். இந்த இணைய ஊடகங்களின்  பிரதான ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்க நான் நாளை வரை காத்திருப்பேன். அதற்கேற்றபடி பின்னர் நான் செயல்படுவேன் என்று அவர்  குறிப்பிட்டார்.

மக்களவையில் இன்று தகவல் தொடர்பு அமைச்சுக்கான விநியோக  மசோதா 2025 மீதான குழு நிலை விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றும்போது அவர் இதனைக் கூறினார்.

தி மலேசியன் இன்சைட், தி வைப்ஸ், தெத்தாரான் ஆகிய இணைய ஊடகங்களின்   ஊடகவியலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக மலேசியப் பத்திரிகையாளர்களின் தேசிய தொழிற்சங்கம்  (என்.யு.ஜே.) கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அறிவித்தது .

பத்திரிக்கையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் காலதாமதமான சம்பளம் உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் தொழிற்சங்கம் உறுதி பூண்டுள்ளது என்று அதன் தலைவர் ஃபாரா மார்ஷித்தா அப்துல் பாத்தா கூறியிருந்தார்.

சிரமத்தை எதிர்கொள்ளும் ஊடகவியலாளர்கள்  காசே @ ஹவானா நிதி மூலம்உதவி  பெறலாம் என்று ஃபாஹ்மி குறிப்பிட்டார்.

காசே @ ஹவானா நிதியானது தேசிய பத்திரிகையாளர்கள் தினத்துடன் மட்டும் சம்பந்தப்படவில்லை. தேவைப்படும் பத்திரிகையாளர்கள் உதவிக்கு  எந்த நேரத்திலும் இதை அணுகலாம் என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.