கோலாலம்பூர், நவ. 28- அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு படைகளின் பயன்பாட்டிற்காக ஹெலிகாப்டர்களைப் பெறுவதில் அரசாங்கம் குத்தகைய முறையைப் பயன்படுத்துகிறது. இந்த முறை வெளிப்படையானதாகவும் நாட்டிற்கு நிதிச்சுமை அளிக்காத வகையிலும் உள்ளது.
பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்கு செலவிடுவதை இந்த குத்தகை திட்டத்தின் மூலம் மிச்சப்படுத்த முடிவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நாம் மலிவான விலையில் ஹெலிகாப்டர்களை வாங்கினாலும் அவற்றை பராமரிப்பதற்கு ஹெலிகாப்டர்களை வாங்கிய தொகையைக் காட்டிலும் அதிகம் செலவிட வேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.
மக்களவையில் இன்று பிரதமர் கேள்வி நேரத்தின் போது பிரதமர் இத்தகவலை வெளியிட்டார். குத்தகை முறையில் மேற்கொள்ளப்படும் மலேசிய ஆயதப் படைக்கான ஹெலிகாப்டர் வாடகைத் திட்டம் தொடர்பில் தானா மேரா தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோஸ்ரீ இக்மால் ஹஷிம் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
மலேசிய ஆயுதப்படை உள்பட பல்வேறு அரசு நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக 26 ஹெலிகாப்டர்களை 15 ஆண்டு கால குத்தகையில் பெறுவதற்கு 1,600 கோடி வெள்ளி செலவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் முன்னதாகக் கூறியிருந்தார்.
லியானார்டோ ரக ஹெலிகாப்படர் நிறுவனத்தில் இத்தாலி அரசாங்கம் 30 விழுக்காட்டு பங்குரிமையைக் கொண்டுள்ளதால் அந்த ஹெலிகாப்டர்களின் குத்தகை ஒப்பந்தத்தை முழுமை படுத்துவதில் தாங்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மேலானி தம்மிடம் உறுதியளித்துள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
அண்மையில் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது நடைபெற்ற சந்திப்பில் இத்தாலிய பிரதமர் இந்த வாக்குறுதியை வழங்கினார் என்றார் அவர்.


