கோலாலம்பூர், நவ. 28 - கடந்த 2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான 2025/2026 மெட்ரிகுலேஷன் கல்விக்கு முதல் கட்ட பதிவு வரும் டிசம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 28 வரை நடைபெறும்.
இரண்டாம் கட்ட மற்றும் மாணவர் தரவு புதுப்பிப்பு நடவடிக்கை எஸ்.பி.எம். முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஐந்து நாட்களுக்கு திறந்திருக்கும் என்று கல்வி அமைச்சு கூறியது.
கல்வியமைச்சின் மெட்ரிகுலேஷன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது முற்றிலும் இலவசமாகும். மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.
2024 எஸ்.பி.எம். முடிவுகள் வெளியான 21 வேலை நாட்களுக்குள் மெட்ரிகுலேஷன் பிரிவு அதன் முடிவுகளை இணையதளத்தில் வெளியிடும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
மெட்ரிகுலேஷன் படிப்புக்கான வாய்ப்பு வழங்கப்பட்ட மாணவர்கள் இணையதளம் மூலம் அனுமதிக் கடிதம் மற்றும் விண்ணப்பப் படிவங்களை பிரதியெடுக்க வேண்டும்.


