கோலாலம்பூர், நவ. 28 - இவ்வாண்டு 249,268 உள்ளடக்கங்களை அகற்றுமாறு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) முகநூலிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவற்றில் 91.6 விழுக்காட்டு உள்ளடக்கங்கள் இணைய சூதாட்டம் மற்றும் நிதி மோசடியுடன் தொடர்புடையவையாகும்.
நீக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கங்களில் 172,072 இணைய சூதாட்டம் தொடர்புடையவை என்றும் எஞ்சிய 56,136 உள்ளடக்கங்கள் நிதி மோசடி சம்பந்தப்பட்டவை என்றும் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
உள்ளடக்கங்களை சமூக ஊடகங்களிருந்து அகற்றுவதற்கு உத்தரவிடும் அதிகாரம் எம்.சி.எம்.சி. க்கு இல்லை. உள்ளடக்கத்தை அகற்றுமாறு மட்டுமே நாங்கள் கோர முடியும். ஆனால் அதனை அந்த தளம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று அமைச்சுக்கான குழு நிலையிலான 2025 விநியோக மசோதா (பட்ஜெட்) மீதான விவாதத்தின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்
கடந்த ஆண்டு முகநூல் வாயிலாக நிகழ்ந்த மோசடிகளால் மலேசியர்கள் 43.2 கோடி வெள்ளியை இழந்துள்ளதை வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் தரவுகள் காட்டுகின்றன.
மலேசியாவில் முகநூல் 250 கோடி வெள்ளி வருமானத்தை ஈட்டியதாகவும் பெரும்பாலும் இணைய முதலீட்டு மோசடிகள் தொடர்பான விளம்பரங்கள் மூலமாக அந்த லாபம் பெறப்பட்டதாகவும் ஃபாஹ்மி கூறினார்.
அரசாங்கம் சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக ஊடகங்களிலிருந்து அகற்றுவதாக மஸ்ஜித் தானா டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடின் சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர், யார் வேண்டுமானாலும் புகார் செய்யலாம் என்றும் அந்த புகாரை எம்.சி.எம்.சி. சம்பந்தப்பட்ட சமூக ஊடக தளத்திற்கு அனுப்பும் என்றும் ஃபாஹ்மி தெளிவுபடுத்தினார்.


