ஷா ஆலம், நவ. 28- ஈஜோக் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜைலானி
காடீர் ஏற்பாட்டில் பெஸ்தாரி ஜெயா மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை
நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பில் 800க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனர்.
கோல சிலாங்கூர் கெஅடிலான் தொகுதி தலைவரும் புக்கிட் மெலாவத்தி
சட்டமன்ற ஒருங்கிணைப்பாளருமான தீபன் சுப்பிரமணியம் ஆதரவுடன்
நடைபெற்ற இந்த பொது உபசரிப்பு நிகழ்வுக்கு சுகாதார அமைச்சரும்
கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர்
ஜூல்கிப்ளி அகமது தலைமை தாங்கினார்.
அறுசுவை உணவு விருந்து மற்றும் ஆடல்,பாடல் நிகழ்வுகளுடன்
ஜனரஞ்சமாக நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில் மூவினங்களையும்
சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டது வட்டார மக்களுடன் தொகுதி
தலைவர்கள் கொண்டிருக்கும் அணுக்கமான நட்புறவைப் புலப்படுத்தும்
வகையில் இருந்தது.
ஈஜோக் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜைலானி காடீரின் மிகவும்
சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு இன ஒற்றுமைக்கான
எடுத்துக்காட்டாகவும் விளங்கியதாக தீபன் சுப்பிரமணியம் கூறினார்.
இந்த பொது உபசரிப்பின் மகத்தான வெற்றி, அடுத்தாண்டில்
பல்லினங்களை உள்ளடக்கிய பல்வேறு சிறப்பான அங்கங்களுடன்
இந்நிகழ்வை நடத்துவதற்குரிய உந்து சக்தியை ஏற்பாட்டாளர்களுக்கு
வழங்கியுள்ளது.
இந்த பொது உபசரிப்பு தீபாவளி கொண்டாட்டத்தை மட்டும்
பிரதிபலிக்கவில்லை. மாறாக, பல்லின மக்களிடையே புரிந்துணர்வு,
ஒற்றுமையை வளர்க்கும் நிகழ்வாகவும் விளங்குகிறது.


